புதிதாக தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டதை அடுத்து, வடக்கில் பல பகுதிகள் இன்று காலை திடீரென முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வவுனியாவில், பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு, நேற்று முன்தினமும், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு நேற்றும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
பட்டாணிசூர் பகுதியைச் சேர்ந்த பலர், வவுனியா நகரில், வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன், ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, இன்று காலை, வவுனியா பசார் வீதியின் ஒரு பகுதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதிகள் என்பன முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு, பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளும், பெறப்பட்டு வருகின்றன.
அதேவேளை, மன்னார்- எருக்கலம்பிட்டி கிராமும் இன்று காலை முதல் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வினோதன் தெரிவித்தார்.
எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தமையினால், திருமண வீட்டிற்கு சென்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை இனங்காணும் வரையில், எருக்கலம்பிட்டி கிராமம் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றும் சுகாதாரப் பிரிவினரால் இன்று முடக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, புலோலியின் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர், இந்த உணவகத்துக்கு வந்திருந்தார் என்பது தெரியவந்ததை அடுத்தே இந்த உணவகம் மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றும் 11 பணியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.