போர்க் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வெள்ளையடிப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் கொரோனா வைரசை பயன்படுத்துகிறது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என ஐ.நாவினால் குற்றம்சாட்டப்பட்ட – பாரிய மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள, ஜெனரல் சவேந்திர சில்வா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான தேசிய நிலையத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற நிலையில், இறுதிப்போரில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 25 இராணுவ அதிகாரிகள் பொதுமக்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் சிவில் நிர்வாகமும் ஜனநாயக கட்டமைப்புகளும் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மீது குண்டு வீசிய, மருத்துவமனைகளை தாக்கிய, பொதுமக்களை பட்டினி போட்ட, அதே அதிகாரிகளே, அந்த மக்களின் சுகாதாரத்தினை பாதுகாக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது இந்த விவகாரத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்ற நெருக்கடியான நிலையை, சர்வதேச சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவில் சிவில் நிர்வாகம் செயல் இழக்கச் செய்யப்படுவதற்கு, இராஜதந்திரிகளும் சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் சமூகமும் உதவக்கூடாது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட ரீதியில் இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள 25 இராணுவ அதிகாரிகளில் 16 பேர், இறுதிப் போரில் பங்கெடுத்தவர்கள்.
சர்வதேச சட்டங்களை மீறியிருக்க கூடிய படையினரில் சிலர், தற்போது போர் இடம்பெற்ற பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் உயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும் நாட்டின் சுகாதாரத்திற்கு பொறுப்பாக இருப்பதும் அவமானகரமான செயல் என்றும், ஜஸ்மின் சூக்கா மேலும் தெரிவித்துள்ளார்.