இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
கொழும்பில் இந்தியத் தூதுவரின் இல்லத்தில், இந்தச் சந்திப்பு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து, சுமார் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள ஏற்பாடுகள் தொடருவதை உறுதிப்படுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அத்துடன் இந்த விடயத்தில், தமிழர் தரப்பு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும், தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், அவ்வாறு செயற்படுவதன் மூலமே இந்தியாவினால் அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டம், புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், இந்திய வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.