எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணையில் இருக்க வேண்டிய முன்மொழிவு வரைபைத் தயாரிப்பது தொடர்பில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக முன்மொழிவு வரைபைத் தயாரிக்க மூவர் அடங்கிய குழுவும் இன்றைய கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் முக்கியஸ்தர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூவரும் இணைந்து நாளை தொடக்கம் தயாரிக்கும் முன்மொழிவு வரைபை மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் மீண்டும் கூடி ஆய்வு செய்து இறுதி செய்யும்.
அதன்பின்னர் அந்த வரைபை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் அனுப்பிவைப்போம் என்று தெரிவித்தார்.
வரைபிலுள்ள பரிந்துரைகளை சிறிலங்கா அரசுக்குத் தெரியும் வகையில் பகிரங்கப்படுத்துவதில்லை எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாக்கியசோதி சரவணமுத்து தலைமையில் கொள்ளுப்பிட்டியிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மாலை 6 தொடக்கம் இரவு 9.30 மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.