தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து குறித்த பிரார்த்தனை வாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, மன்னாரில் பிரார்த்தனை வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று ஆரம்பமாகிய பிரார்த்தனை வாரம் எதிர்வரும் 14 ஆம் நாள் வரை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது மக்கள் இணைந்து இந்த பிராத்தனை வாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் வெளியிட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ,
“பொது இடங்கள் மற்றும் இறை பிரார்த்தனை இடங்களில் மஞ்சள் மற்றும் கருப்பு நிற தோரணங்களை பறக்க விட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பிராத்தனைகளை மேற்கொள்வோம்.
மக்களுடன் இணைந்து இந்த வாரத்தில் அமைதியான முறையில் கிராமங்களிலுள்ள பொது இடங்களில் ஒன்று கூடி இறை பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
நாட்டின் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளான சுமார் 147 ற்கும் மேற்பட்டவர்களை, பொங்கல் பரிசாக அவர்களின் குடும்பங்களுடன் இணைக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிழக்கிலும் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திருகோணமலையில் பிரார்த்தனை வாரம் ஆரம்பபிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரார்த்தனையில் திருகோணமலைக்கான நிகழ்வு இன்றைய தினம் பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின்போது தமிழ் அரசியல் கைதிகள் வருகின்ற பொங்கல் தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, வழிபாட்டு நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இச்செயற்பாடானது தொடர்ச்சியாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.