தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறிலங்கா அரசாங்கத்தை விட, தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னிலை வகித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ 2003ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி Tech என்ற ஓர் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தை அறிமுகம் செய்தனர்.
அதில் சிலிக்கான் வேலியிலுள்ளவர்களின் (silicon valley) ஆலோசனைகளின் அடிப்படையில் பாரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
அவர்களின் ஆற்றலுக்கு நிகரான இவ்வாறான திட்டங்கள் இதுவரையில் நாட்டில் கிடையாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விட முன்னணியில் இருந்தனர்.
‘வன்னி Tech’ தொடர்பிலான தகவல்களை நான் சபையில் ஆவணப்படுத்துகின்றேன். இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் இதனை பார்க்கலாம்.
அத்துடன் மட்டக்களப்பை சார்ந்த சஞ்சீவன் என்னும் நபர் நீருக்கு அடியில் சென்று தகவல்களை சேகரிக்கும் ஓர் கண்டுபிடிப்பை செய்து இருந்தார்.
இதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளார். இப்படியானவர்களை ஊக்குவித்து எமது நாட்டின் வளர்ச்சியில் பங்காற்ற வைக்க வேண்டும்.
இவ்வாறான கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டவர்களை நாடாளுமன்றம் அழைத்து இதுவரையில் நாம் பாராட்டுத் தெரிவிக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.