எமது இளைஞர்கள் கடந்த காலங்களில் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்ட, அதே காரணங்களையே இந்த அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் உள்ள அரசாங்கம் சிறிலங்காவிலுள்ள சகல மக்களிற்குமான அரசல்ல. ஒரே நாடு, ஒரே சட்டம் என்று அரசாங்கத்தின் எல்லா உறுப்பினர்களும் கூறி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் எமக்கென வேறு சட்டம் நீதிக்கு முரணான வகையில் பின்பற்றப்படுகின்றது. இதுதான் யதார்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்களைப்பொறுத்தவரையில் நாம் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆகவே, எமக்கான நீதியை நாம் தான் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாம் சிறிலங்கா பிரஜைகளாக முன்னோக்கி செல்லப் போகின்றோமா அல்லது தொடர்ந்தும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனங்களாகப் பிரிந்து பின்னோக்கிச் செல்லப்போகின்றோமா என்பதை ஆட்சியாளர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.