யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பாதுகாப்பு தரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ராஜபக்ச அரசு இடித்தழித்துள்ளது.
இந்த இடித்தளிக்கும் செயற்பாட்டின் போது யாழ்.பல்கலை வளாகத்தின் அனைத்து வாயல்களும் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் விசேட அதிரடிப்படையினர் நடமாட்டமும் தாராளமாக இருந்தது.
பல்கலைக்கழகத்தினுள் எந்தவொரு நபரும் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. பல்கலைக்கத்தினை அண்மித்த வீதிகளில் கூட மாணவர்கள் உள்ளிட்டவர்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நினைவேந்தல் தூபியை இடித்தழிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அதன்போது முகத்தினை கறுப்புத்துணிகளால் மறைத்த இனந்தெரியாத நபர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.