13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வது போன்ற நடவடிக்கைகள் நிச்சயமாக இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் எச்சரித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபேதே இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா தொற்று நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மனரீதியான தாக்கத்தை அது அதிகமாக கொடுத்துள்ளது.
அவர்களது மத நம்பிக்கைகளை சிதைப்பதைப் போல, ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுகின்றன. அதை அவர்கள் எதிர்க்கிறார்கள். ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் அதற்கெதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்களுடைய பிரச்சினை ஆரம்பத்தில் இதேபோல சாத்வீகமாக ஆரம்பித்தே, இறுதியாக ஆயுதப் போராட்டமாகியது.
தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் 1956ஆம் ஆண்டு சாத்வீக போராட்டங்கள் ஆரம்பித்தன. இதனால் பண்டா- செல்வா ஒப்பந்தம் உருவானது.
இதற்கு எதிராக ஜே.ஆர், பௌத்த பிக்குகள் பேரணியாக சென்றனர். பண்டாரநாயக்கா ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார். அவர் அன்று ஒப்பந்தத்தை கிழித்து எறிந்திருக்கா விட்டால், நாட்டில் இவ்வளவு அனர்த்தங்கள் நடந்திருக்காது என்றும் தெரிவித்தார்.