யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும், மாணவர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளியே, இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவரும் இன்று உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு சிறிலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர் விலக வேண்டும் என்றும், கோரி இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.