சிறிலங்கா அரசின் இன அழிப்பின் தொடர்ச்சியாக யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றமையைக் கண்டித்து கனடாவில் பாரிய கண்டன வாகனப் பேரணி இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வாகனப்பேரணியானது, இரண்டு வேறுவேறு இடயங்களில் ஆரம்பமாகவுள்ளது.
பிராம்ப்டனில் நகர மண்டபத்திலிருந்தும் ஸ்கார்பரோவில் மார்க்கம் ஸ்டீல் சந்திப்பிலிருந்தும் இருந்தும் நண்பகல் 12 மணிக்கு இரண்டு பேரணிகளும் ஏக காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பின்னர் இரண்டு பேரணிகளும் யங்சந்திப்பில் ஒன்றிணைந்து ரொரண்டோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தினை நோக்கிச் செல்லவுள்ளது.
இப்பேரணியில் அனைத்து தமிழின உறவுகள், அமைப்புக்கள், ஊர்சங்கங்கள் இப்பேரனியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதேநேரம், பேரணியில் கலந்து கொள்பவர்கள், தமது வாகனங்களில் இருந்து வெளியியே கையசைப்பதைக் கூட தவிர்க்குமாறும், எந்தவொரு காரணத்திற்காகவும் வாகனத்தினை விட்டு இறங்க வேண்டாம் என்றும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் ஒரு வாகனத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் மட்டுமே அமரமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்புச் சட்டங்களை பின்பற்றும் முகமாகவே இந்த அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.