யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் நினைவு தூபி இடித்து அகற்றப்பட்டமையை கண்டித்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இறந்தவர்களை நினைவுக்கூருவது உரிமை என்றும், யாழ் பல்கலைக்கழகத்தில் இறந்தவர்களை நினைவுக் கூர அமைக்கப்பட்டிருந்த தூபி அழிக்கப்பட்டதை எதிர்ப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“பொது சமூக நோக்கில் கொல்லப்பட்ட மனிதர்கள் தெற்கில் நினைவு கூரப்படுகின்றனர். அதற்கான நினைவு தூபிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இலவச கல்விக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் அரசாங்கத்தினால் கொலை செய்யப்பட்ட மாணவர்களை நினைவுக் கூரும் வகையில் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நினைவு தூபிகளை நிர்மாணித்துள்ளனர்.
வருடாந்தம் ஜூன் 20 ஆம் நாள் அந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட மாணவர்களை நினைவுக் கூரும் நோக்கில் பல்கலைக்கழகங்களில் வீரமாணவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அதேபோல் 1971 போராட்டம், 1988 – 89 ஆம் ஆண்டுகளில் நடந்த வன்செயலில் கொலை செய்யப்பட்ட மக்களை நினைவுக் கூரவும் தெற்கில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இறந்தவர்களை நினைவுக் கூரும் இந்த உரிமை வடக்கில் உள்ள மக்களுக்கும் இருக்க வேண்டும்.
அவர்கள் நடத்திய போராட்டம் நீதியானதா, அநீதியானதா என்பது தனியாக பேசப்பட வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் தமக்காக உயிர் நீத்தனர் எனக் கருதப்படும் மனிதர்களை நினைவுக் கூர வடக்கு மக்களுக்கு உரிமை உள்ளது.
இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி இடித்து அகற்றப்பட்டுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட செயல் எனக் கூறி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் கைகளை துடைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றன.
எனினும் இது அரசாங்கத்தினால், திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்பது தெளிவாக தெரிகிறது” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.