யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு இன்று காலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பல்கலைகழக நிர்வாகத்தினால், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அகற்றப்பட்டதற்கு உலகளவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
அத்துடன், கடந்த இரண்டு நாட்களாக ஒன்பது மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைச் சந்தித்து, நினைவுத் தூபியை சட்டபூர்வமாக மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து, மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டதுடன், இன்று காலை 7 மணியளவில், அதே இடத்தில் புதிய நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் மாணவர்களுடன், துணைவேந்தரும் கலந்து கொண்டு அடிக்கல்நாட்டி வைத்துள்ளார்.
மாணவர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்களாலும், இன்று முன்னெடுக்கப்படும் முழு அடைப்பு போராட்டத்தினாலும் தாம் இந்து முடிவுக்கு வந்திருப்பதாக துணைவேந்தர் சற்குணராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மீண்டுமு முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைப்பதற்கு, நல்லூார் பிரதேச சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
நல்லூார் பிரதேச சபையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக எடுக்கப்பட்டது என்றும், தூபியினை நிர்மாணிப்பதற்கான முழுச் செலவையும், திருகோணமலையை சேர்ந்த ஒருவர் வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்றும், யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.