யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணித்து அரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது அங்கு உரிமை போராட்டம் தலைத்தூக்குவது இயல்பான விடயமாகும்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பும் இவ்வாறான பின்னணியிலேயே எழுச்சி பெற்றது.
இனக்கலவரங்களில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவினர்கள் நினைவுகூர்வது ஒன்றும் தேசத் துரோக செயற்பாடல்ல.
தெற்கில் உள்ள பல்கலைக்கழங்களில் ஜேவிபியினரின் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விடயத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட தன்மையினை கையாளுவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது.
இந்தநிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.