யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டதற்கு, பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவும், கவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிரித்தானிய நாடாளுமன்ற குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “நினைவில் கொள்வதற்கான உரிமை நல்லிணக்கம் மற்றும் நீதி செயல்முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
நினைவுச்சின்னத்தை அழிப்பது இந்த செயல்முறையை நேரடியாக குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன், சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் வரலாற்றையும் அடையாளத்தையும் அழிக்கும் முயற்சியாகும்.
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழர்களுடன் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம், முள்ளிவாய்க்கால நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எமது கவலைகளை எழுப்புமாறு பிரித்தானிய வெளியுறவு செயலாளருக்கும், கடிதம் எழுதியுள்ளோம். தமிழர்களின் நினைவேந்தலுக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதலைக் கண்டித்து அவரை எங்களுடன் இணையுமாறு கோருகிறோம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.