சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
இது தொடர்பில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்டுள்ள வர்த்தமானியில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில், “விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் திகதியில் இருந்து 31ஆம் திகதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஆளுநர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை ஆகிய பகுதிகளில் போட்டியை நடத்தலாம்.
தேனி மாவட்டத்தின் பல்லவராயம்பட்டி, திருப்பூர் மாவட்டத்தின் அழகுமலை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை (அம்மன்குளம்), சிவகங்கை மாவட்டம் சிரவயல், கண்டிபட்டி, குன்றக்குடி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.