யாழ்ப்பாண மாவட்டத்தில் சில நாட்களாக நீடிக்கும் மழையுடன் கூடிய காலநிலையினால், 358 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மழையினால், 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால், பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்துக்குள் சராசரியாக, 36 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் அச்சுவேலியில் 78.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் ஆயிரத்து 452 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 89 குடும்பங்களைச் சோந்த 267 பேர் 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.