சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா இம்மாதம் 27ஆம் திகதி விடுதலையாக இருக்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை செலுத்திவிட்டால் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
இதனை அடுத்து, சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். எனவே, இம்மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியாகியுள்ளது.
விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு, சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க அ.ம.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க. நிர்வாகிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.