ஜிகாதி வலையமைப்பான அல்-கெய்டாவை தமது நாட்டில் தளமாக கொண்டு இயங்குவதற்கு, ஈரானிய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ (Mike Pompeo) குற்றம் சாட்டியுள்ளார்.
அல்-கெய்டா அமைப்பு, ஈரானிய ஆட்சியாளர்களின் நிழலில் செயற்பட்டு வருவதாக, அவர், தெரிவித்துள்ளார்.
எனினும், பொம்பியோ தனது குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரம் எதையும் முன்வைக்கவில்லை.
அல்கெய்டாவின் இரண்டாவது நிலை தளபதி அப்துல்லா அகமட் அப்துல்லா (Abdullah Ahmed Abdullah) அல்லது அபு முகமட் அல் மஸ்ரி (Abu Muhammad al-Masri) தெஹ்ரானில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி கொல்லப்பட்டார் என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய முகவர்களால் இவர் கொல்லப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியானபோது அதனை ஈரானிய அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.