சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் துறைமுக தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுக்கள், தோல்வியில் முடிந்துள்ள நிலையில், கொழும்பு கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி.யின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், தேசிய வர்த்தக தொழிற்சங்க நிலையத்தின் தலைவருமான, லால்காந்த இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“நேற்றைய சந்திப்பின் போது, கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு வழங்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக கூறியிருக்கிறது.
சிறிலங்கா ஜனாதிபதி இந்த முனையம் இந்தியாவுக்கு விற்கப்படாது என்று கூறியுள்ள போதும், 49 வீத பங்குகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டால், துறைமுக அதிகார சபையிடம் உள்ள 100 வீத உரிமை பறிபோய் விடும்.
துறைமுக அதிகார சபையே 100 வீத உரிமையையும் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே போராடி வருகிறோம்.
நாங்கள் இதனை விட்டுக் கொடுக்கமாட்டோம், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.