நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீது ஏதேனுமொரு வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும். ஹரீனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னிற்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும் அரசியலமைப்பிற்கமையவும் சட்ட ரீதியாகவும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பாதுகாப்பதற்கான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.