கொரோனா வைரசுக்கு எதிராக, இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக, சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“தடுப்பூசிகள் மிக உயர்ந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன என்ற வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தடுப்பூசிகளை சிறிலங்கா மிக விரைவில் இறக்குமதி செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே தடுப்பூசி மருந்துகளை கொடையாக வழங்குமாறு இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.