வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு, இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றுவோருக்கு, பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதில், மற்றும் ஒரு பகுதியினரின் பிசிஆர் சோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளது.
இதன்படி, வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 13 பேருக்கும் ஆடைத்தொழிற்சாலையை சேரந்த 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து. வவுனியா நகர் பகுதியில் கடந்த ஒருவாரத்தில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த மேலும் 500 பேரின் பி.சி.ஆர் சோதனை முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், அவை கிடைத்த பின்னரே நகரின் முடக்க நிலை தளர்த்தப்படும் என்றும், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும், வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தலா ஒருவருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.