சிறிலங்கா தொடர்பாக, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள் இணைந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“உள்ளூர் பொறிமுறை மூலமாக சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இராணுவமயமாக்கல், அரசியல் கைதிகளை கால வரையறையின்றி தடுத்து வைத்திருத்தல், நில அபகரிப்பு, தமிழ் மக்களின் பாரம்பரிய கூட்டு நில உரிமைகளை மறுப்பது, அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கண்காணிப்பதை தீவிரப்படுத்துதல், கோவிட்19 ஆல் இறக்கும் முஸ்லிம் சகோதரரின் ஜனாசா அடக்கத்தை மறுத்தல், நினைவேந்தல் உரிமையை மறுத்தல் போன்ற தமிழ் மக்களுக்கு எதிராக தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறைகள் மோசமாகி கொண்டிருக்கின்றன.
ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த உறுதிமொழி தொடர்பாக ஆராயும் போது, இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும்.
அந்தத் தீர்மானமானது, இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டதென்றும், இதனை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ சிறிலங்கா நிறைவேற்றும் வாய்ப்பு இல்லை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன்,சிறிலங்காவை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக் கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, ஐ.நா. பொதுச்சபை, ஐ.நா. பாதுகாப்புச்சபை போன்றவை எடுக்க வேண்டும் என புதிய தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தலைவர் இந்த விடயத்தை மீளவும் செயலாளர் நாயகத்திற்கு அனுப்ப வேண்டும்.
சிறிலங்காவில் தொடர்ந்து நடைபெறுகிற மீறல்களை ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் கண்காணிக்கவும், சிறிலங்காவில் அதற்கான அலுவலகமொன்றை உருவாக்க வேண்டும்.
ஐ.நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளை சேகரிக்கிற பொறிமுறை போன்ற ஒரு பொறிமுறையை, 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல் வேண்டும். என்றும், அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட தமிழர் பாரம்பரிய ஒன்றியத்தின் பிரதிநிதி அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், தருகோணமலை ஆயர் நொயல் இம்மானுவல் ஆண்டகை, தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் தலைவர் கனகரஞ்சினி உள்ளிட்ட பலரும் இந்த கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.