மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களில் இருந்து, வடக்கிற்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்துமாறு, சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த உத்தரவுக்கு அமைய, வடகிற்கு வருவோரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும், மேல் மாகாணத்தில் இருந்தும், அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்தும், வருகை தருவோரை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தி, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையை இடைநிறுத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு நேற்று சுற்றறிக்கை மூலம் பணிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவசர தேவை ஏற்பட்டால் மட்டும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து, அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வருபவர்களை சுயதனிமைப்படுத்த முடியும் என்றும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.