வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.
அத்துடன், இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சிப் பிரதேசம் ‘வடக்கு கிழக்கு மாகாண சுயாட்சி’ அல்லது ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான ஆலோசனைகள் அரசாங்கத்தினால் அனைத்து தரப்புகளிடமிருந்தும் கோரப்பட்டிருந்த நிலையில், குறித்த கட்சியின் அரசியல் குழுவால் அனுப்பிவைக்கப்பட்ட ஆலோசனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசானது பிராந்திய சுயாட்சி அமைப்புகளை உடையதாக உள்ளாட்சி நிறுவனங்களுக்கிடையே அதிகாரம் பகிரப்பட்ட இறையாண்மையும் தன்னாதிக்கமும் உடைய ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.