கிளிநொச்சியில் தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் கடந்த ஒருவார காலமாக சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சங்கத்தின் ஜனநாயக பண்புகளைக் காப்பாற்றுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு தொழிலாளர்களையும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள சுரேஷ் பிறேமச்சந்திரன்,
“ஏற்கனவே இருந்த நிர்வாகத்தை ஊழல்கள் நிறைந்ததென காரணம் காட்டி கூட்டுறவு ஆணையாளர் கலைத்து ஐந் துபேர் கொண்ட ஒரு புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்ததை எதிர்த்தும், உடனடியாகப் புதிய நிர்வாகத்தை மீண்டும் அமைக்குமாறும், அதற்கான தேர்தலை நடத்துமாறு கோரியே, இரண்டு தொழிலாளிகளும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.
இதனால், சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 550 குடும்பங்களுக்கு மேல் பாதிப்படைந்துள்ளன.
தவறணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாழ்வாதாரங்கள் அற்று ஒருவேளை உணவிற்கே அல்லலுறும் நிலைக்கு இந்தக் குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன.
ஆணையாளரின் மேற்படி முடிவானது அவர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
ஒருவாரமாக உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டுறவுத்துறை சார்ந்த தொழிலாளிகளை இதுவரை கூட்டுறவு ஆணையாளர் நேரில் சென்று சந்திக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.