அனுசரணைத் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர அனுசரணை நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடா, ஜேர்மனி, வடக்கு மெசிடோனியா, மொன்ரெனிக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகள், வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுடன் இணைந்து புதிய தீர்மானத்தை முன்வைக்க, யோசனை ஒன்றை முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், இதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க அனுசரணை நாடுகள் தயாராகி வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, ஜெனிவா தீர்மானம் அரசியலமைப்பிற்கு எதிராகவும், இறையாண்மைக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் இருக்கும் நிலையில், அதனை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
எனினும், அரசியல் ரீதியாக, இது ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.