யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து, கடுமையான கரிசனையை வெளியிட்டிருந்தார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
“கடந்த 8ஆம் திகதி இரவு முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டதை அடுத்து, மறுநாள், சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க, இந்திய தூதுவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், அவர் குருணாகலவில் இருந்ததால் உடனடியாக சந்திக்க முடியவில்லை.
ஞாயிறு பிற்பகல் சிறிலங்கா பிரதமர் கொழும்பு திரும்பியதும் அவரது இல்லத்துக்குச் சென்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அவரைச் சந்தித்து, நினைவுத் தூபி இடிப்புக்கு, இந்தியாவின் தரப்பில், கடுமையான கரிசனையை வெளியிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப் பின்னர் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தினால், தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கள் வெடிக்க வழிவகுக்கும் என்று அவர் சிறிலங்கா பிரதமரிடம் கூறியதாக தெரியவருகிறது.
இதையடுத்து பிரதமர் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டதை தொடர்ந்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவும், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவும் இணைந்து, திங்கட்கிழமை அதிகாலையில் நிலைமையை தணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாணவர்களின் எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து அகற்றப்பட்ட நினைவுத் தூபிக்குப் பதிலாக புதிய நினைவிடத்தை அமைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தச் சம்பவம் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கா விட்டால், புதுடெல்லியில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும்.என்றும் அதில் கூறப்பட்டுள்ளது,