டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி உழவு இயந்திர பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி சிங்கு எல்லையில் இன்று நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் யோகேந்திர யாதவ், தா்ஷன் பால் சிங் ஆகியோர் இவ்வாறு கூறியுள்ளனர்.
இதன்போது“குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி தில்லியில் உள்ள வெளிவட்டச் சாலையில் உழவு இயந்திர பேரணி நடத்துவோம். எங்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும்.
எங்களால் குடியரசு தின அணிவகுப்புக்கு இடையூறு எதுவும் ஏற்படாது. உழவு இயந்திரங்களில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டிருக்கும்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவா்கள் அல்லது போராட்டத்தில் பங்கேற்பவா்கள் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குகள் தொடுத்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளனர்.