கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின்போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையர் தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திடீரென தந்தையார் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று திருக்கோவிலில் இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருக்கோவில் 2ஆம் பிரிவு நல்லையா வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் சுகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சம்பவதினமான இன்று பகல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது தாயாரை தந்தையர் தாக்க முற்பட்டபோது மகள் குறுக்கே சென்றமையினால் அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இதனால் அவர் காயமடைந்து நிலையில் திருக்கோவில்ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மனைவியார் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், வீட்டில் எவரும் இல்லாதபோது மகளை தாக்கிய குற்ற உணர்வினை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.