பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஆயினும் இன்றைய தினம் காணி அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் காணி அளவிடுவதற்கு அங்கு வருகை தரவில்லை.
இதனால், நாளாந்தம் திடீர் திடீரென மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினரின் தேவைகளுக்காக அதிகரிக்கும் நோக்கில் நிலஅளவைத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே வழங்க கோரியும் வேலணைப் பிரதேச செயலகத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்றனர்.
இதனை தொடர்ந்து அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பிரதேச செயலகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள் நுழைவதற்கு தடை விதித்திருந்தனர்.
எனினும்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பிரதேச செயலாளரிடத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.