வடக்கு மாகாணத்தில் நேற்று மட்டும் 32 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆய்வுகூடங்களில், நேற்று 728 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, வவுனியா மாவட்டத்தில் 25 பேருக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து பேருக்கும், மன்னாரில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுயதனிமைப்படுத்தலில் இருந்த நிலையிலேயே, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.