தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலையை எழுப்புவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயம் மற்றும் தமக்கான கடமைகளை நிராகரித்தல் போன்ற தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்கோளிட்டு அறிக்கையொன்றினை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பத்து வழக்குகளை ஆராய்ந்து சிறிலங்காவின் குற்றவியல் நீதி அமைப்பின் தோல்விகள் மற்றும் குறைபாடுகளை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அடையாளப்படுத்தியுள்ளது.
இந்த வழக்குகளில் பெரும்பாலானவற்றில், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீதிக்காகக் காத்திருப்பதாகவும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை மற்றும் திருகோணமலையில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.