தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அக்கட்சி கடிதம் அனுப்பியுள்ளதுடன் தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் உப தலைவரும் ஊடகப் பேச்சாளருமான சமன்குமார் கூறுகையில், ‘சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன கடந்த வாரம் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
எவ்வாறாயினும் அந்த ஏற்பாடுகளும் சுதந்திர தின நிகழ்வுகளும் எந்தவொரு இன மக்களையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.