நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த சட்டம், குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றின் உத்தரவை மீறி அடிக்கல் நாட்டியவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், ‘1932ஆம் ஆண்டு வர்த்தமானியில் குருந்தூர் மலைப் பகுதியில் ‘குருந்தசேவ’ விகாரை இருந்தது என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கூறியிருக்கின்றார்.
ஆனால் அங்கு சோழர்கள் காலத்தில் சிவன்கோயில் அமைந்திருந்ததாக அம்மக்களிடையே நிலவி வரும் பாரம்பரியமாக கதைகள் தெரிவிக்கின்றன. அதற்குச் சான்றாக மலையின் உச்சிப் பகுதியில் கருங்கல் தூண்களின் இடிபாடுகள் காணப்படுகின்றன. விகாரைகள் கருங்கற் தூண்களால் அமைக்கப்படுவதில்லை என்பதால் அங்கு விகாரை அமைந்திருக்கச் சாத்தியமில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.