சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை கனடா தொடர்ந்தும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் ரூடோவிடத்தில் கோருவதாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
தைப்பொங்கல், தமிழ் மரபுத் திங்கள் ஆகியவற்றை முன்னிட்டு சமஷ்டி லிபரல் கட்சி நாடாளுமன்றக் குழு இணையத்தில் நடத்தும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய அவர் சிறிலங்காத் தீவில் தமிழர்களின் பகுதிகளில் நினைவேந்தல்களைச் செய்வதற்கு தடைகள் காணப்படுவதையும் எடுத்துக் கூறினார்.
அத்துடன், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல், சமாதானம், நல்லிணக்க விடயங்களில் தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களும், கரிசனைகளும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலாதேவி ஹரிஸின் பதவியேற்பு நிறைவடைந்துள்ள நிலையில் உயர் பதவியொன்றை தமிழ் சமூகத்தினைச்சேர்ந்த பெண்ணொருவர் வகிப்பது கொண்டாடப்பட வேண்டியது என்றும் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
கனடாவிலும் அனித்தா ஆனந்த் தமிழ் சமூகத்தினைச் சேர்ந்தவர் என்று சுட்டிக்காடியவர், அமைச்சராக அவர் நேரகாலம் பார்க்காது மக்கள் சேவையை முன்னெடுத்து வருகின்றார் என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பாக கொரோனா தொற்றுக்காலத்தில் தடுப்பூசி கொள்வனவு விடயத்தில்அவருடைய பணிகள் காத்திரமானவை என்றும் கூறினார்.
இதேவேளை, கொரோனா காலத்தில் செயற்படும் முன்களப் பணியாளர்களின் சேவைகள் கௌரவத்திற்குரியவை என்றும் அவர் குறிப்பிட்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.