யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் முன்னெடுத்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி வலிகாமம் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரின் தலையீட்டை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நிலாவரை கிணற்றுப் பகுதியில் சிங்கள மொழி பேசும் சிலர் கட்டட அத்திபாரம் வெட்டுவதைப் போன்று வெட்டி வருகின்றனர் என்ற தகவல் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்குக் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அவைக் கூட்டத்தினை தவிசாளர் சடுதியாக முடிவுறுத்திவிட்டு சபையினரையும் அழைத்துக்கொண்டு நிலாவரை கிணற்றுப் பகுதிக்குச் சென்றார்.
இதன்போது, நிலாவரை கிணற்றுப் பகுதியில் இராணுவத்தினர் பலர் இருந்த நிலையில் தவிசாளர் உள்ளிட்டோரின் வருகையை அடுத்து அவர்கள் விலகிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் நிலத்தை வெட்டிக்கொண்டிருந்தவர்களிடம் தவிசாளர் விளக்கம் கேட்டார்.
இதற்கு, அங்கு நின்ற அதிகாரி ஒருவர் தான் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நளின் வீரசிங்க எனவும், தமது பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகள் ஆக்கிரமிப்புப் பணிகளாகவே அமைகின்றன என்பதால் இந்த விடயத்தில் சந்தேகம் உள்ளதாக தவிசாளர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.
இதையடுத்து, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உள்ளிட்ட பல செயற்பட்டாளர்களும் அவ்விடத்திற்குச் சென்றிருந்தனர்.
அத்துடன், ஊடகங்களின் வருகை மற்றும் எதிர்ப்பு வலுத்த நிலையில் தொல்லியல் திணைக்களத்தினர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.