சுன்னாகம்- கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணிக்கு அருகில் உள்ள அரச மரம் தொடர்பாக சிறிலங்கா இராணுத்தினர் விசாரித்துச் சென்றுள்ளதால், அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை ஐந்து மணியளவில் குறித்த ஆலயத்துக்கு சென்ற சிலர் தம்மை காரை நகர் முகாமைச் சேர்ந்த படையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பூசகரிடம் தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரத்தை உள்ளடக்கிய நிலம் தொடர்பாக விசாரித்துள்ளனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனுக்கு பூசகரால் இன்று காலை தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு சென்ற சித்தார்த்தன் மற்றும் கஜதீபன் ஆகியோர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
கந்தரோடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து ஆலயத்தைப் பகுதியில் அரச மரம் உள்ள நிலப்பகுதி குறித்து சிறிலங்கா படையினர் விசாரித்துச் சென்றுள்ளதால் அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.