இந்தியாவில் இருந்து முதல் தொகுதி கொரோனா தடுப்பூசிகள், வரும் 27ஆம் நாள் சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
6 இலட்சம் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா தடுப்பு மருந்துகள் முதல் கட்டமாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படவுள்ளதாக, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார்.
அதேவேளை, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,
பிலியந்தல மாவட்ட மருத்துவமனை, ராகம போதனா மருத்துவமனை, பிலியந்தல சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ஆகிய இடங்களில் இன்று இந்த ஒத்திகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
“இந்த ஒத்திகையின் மூலம், எவ்வாறு தடுப்பூசி போடும் நடவடிக்கைளை ஒருங்கிணைப்பது, இதிலுள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
அத்துடன். ஒரு மணித்தியாலம் அல்லது ஒரு நாளில் எத்தனை தடுப்பூசிகளைப் போட முடியும் என்பதைக் இந்த கண்டறிந்து, அதற்கேற்ப திட்டங்களை வகுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.