நெடுந்தீவுக் கடலில், சிறிலங்கா கடற்படைப் படகு மோதி உயிரிழந்த நான்கு தமிழக மீனவர்களின் சடலங்களும், இந்திய கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா கடற்படைப் படகு மோதியதில், கவிழ்ந்த இந்திய மீன்பிடிப் படகில் இருந்த4 மீனவர்களின் சடலங்களும் சிறிலங்கா கடற்படையினரால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளை அடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் சடலங்கள் பொறுப்பேற்கப்பட்டன.
இதையடுத்து, சடலங்கள் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிறிலங்கா கடலோரக் காவல்படையினரிடம் கையளிக்கப்பட்டன.
இதையடுத்து, கடலோரக் காவல்படையின் ரோந்துப் பட்கு ஒன்றில் ஏற்றப்பட்ட நான்கு சடலங்களும், சர்வதேச கடல் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய கரையோரக் காவல்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.