சிறிலங்காவில் முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவானது முழுக் கேலிக்கூத்து எனவும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்று முடிந்த யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கம் அதனை ஆராயவோ, உண்மைகளை கண்டறியவோ இதுவரை எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கையை மீண்டும் வலியுறுத்தும் விதத்தில் புதிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பது கண்துடைப்பு நாடகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.