ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் குறித்த விவகாரங்களைக் கையாளுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய உள்ளக குழுவொன்றை அமைத்துள்ளதாக வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
“மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு உள்ளக குழுவை நாங்கள் நியமித்துள்ளோம். சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு விளக்கமளித்து, அவர்களிடமிருந்து வழிகாட்டுதலை பெற்றுக் கொள்கிறோம்.
ஜெனீவாவில் நிரந்தர பிரதிநிதி, நியூயோர்க்கில் உள்ள நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதரகங்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டு, இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கலந்துரையாடி வருகிறோம்.
வெளியுறவு அமைச்சு, நீதி அமைச்சு, தேசிய புலனாய்வுத் தலைவர், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி ஊடகப் பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களம், திறைசேரி என்பன இந்த விடயத்தில் இணைந்து செய்யற்படுகின்றன.
அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒத்தகருத்துடைய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளதாக, அவர் மேலும் கூறியுள்ளார்.