திருகோணமலை துறைமுகத்துக்கு கிளிங்கர் ஏற்றி வந்த போது, பாறைகளில் சிக்கி தரைதட்டியுள்ள கப்பலில் இருந்த 18 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
யாலவுக்கு அருகே தென்கிழக்கு கரைக்கு அப்பால், 10 கி.மீ தொலைவில் லைபீரிய கொடி தாங்கிய எம்வி ஈரோசன் என்ற கப்பல் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கியது.
இதையடுத்து உதவிக்கு விரைந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள், மூலம் நேற்று கப்பலில் இருந்த 18 மாலுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை விபத்தில் சிக்கிய கப்பலை சோதனையிட்ட கடற்படை சுழியோடிகள், அதில் நீர்க்கசிவு ஏற்படவில்லை என்றும், கடலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்றும், தெரிவித்துள்ளனர்.
அத்துடன்,கப்பலின் அடிப்பாகத்தின் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே நீரில் இருப்பதாகவும். எஞ்சிய பகுதி பவளப்பாறையில் சிக்கியுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா கூறியுள்ளார்.
இந்தநிலையில் கப்பலின் உள்ள கிளிங்கரை இறக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை சாதகங்களைப் பொறுத்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.