இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், ஐ.நா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் ஏனைய உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயற்பட்டு – இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை உறுதி செய்திட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான – சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படும் விசாரணையை நடத்த வேண்டும் என நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதும் – அந்தத் தீர்மானத்தின்படி அளித்த உத்தரவாதத்தை இலங்கை அரசு மீறி விட்டது என்பதும் தற்போது தெளிவாகத் தெரிகிறது.
ஈழத்தமிழர்களின் சட்டபூர்வமான விருப்பங்களை நிறைவேற்றாமல் – ஈழத்தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றிற்கு உத்தரவாதமளிக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்திற்கு எதிராகவே இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தத் தருணத்தில், “ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க – இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் – கோரிக்கை விடுத்துள்ளதை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.” என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.