ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு சிறிலங்கா ஒருபோதும் அடிபணியாது என்று, சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் மனித உரிமை விவகாரங்களில் சிறிலங்காவுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என்று, அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கூறியிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.
ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.
அதை விடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது.
அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால் தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இம்முறையும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் சிறிலங்கா மீது மேலும் நெருக்குவாரங்களைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், சிறிலங்காவின் நட்பு நாடுகள் இதனை எதிர்க்கும்.” என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.