முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில், இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 25ஆம் நாள் பாடசாலை மைதானத்தை துப்புரவு செய்தபோது, வெடிபொருள்கள் மீட்கப்பட்டிருந்தன.
நிலத்தில் மேலும் மோட்டார் குண்டுகள் புதைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கமைவாக, இன்று அவற்றை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சிறிலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்த அகழ்வுப் பணியின் போது, நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட இடத்துக்கு, ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அத்துடன், இதுதொடர்பான படங்கள் எதுவும் ஊடகங்களில் வெளிவரக் கூடாது என்றும் ஊடகவியலாளர்களிடம் சிறிலங்கா படையினர் அச்சுறுத்தியுள்ளனர்.