சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்படும், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பயணத் தடை விதிக்கவும், சொத்துக்களை முடக்கவும், அவர் பரிந்துரை செய்துள்ளார்.
ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பசெலெட் அம்மையார் சமர்ப்பிக்கவுள்ள சிறிலங்கா தொடர்பான, அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் பெப்ரவரி 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள 17 பக்கங்களை கொண்ட அறிக்கையின் முற்கூட்டிய பிரதியை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தமது இணையத்தளத்தில் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு, நீதியை உறுதி செய்வதற்கான வாக்குறுதிகளை இலங்கை மறுத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு முயற்சிகள், தோல்வியடைந்து விட்டன என்றும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அவநம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முந்தைய நிர்வாகங்களின் கீழ் இடம்பெற்ற சில முன்னேற்றங்கரமான விடயங்களை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், மாற்றியமைத்துள்ளது என்றும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
போர்க்கால மீறல்களில் தொடர்புடையவர்கள் என்று ஐ.நா அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாகவும், ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதற்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
2006 இல் பிரெஞ்சு தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை, 2009 ஆம் ஆண்டு லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை போன்ற முக்கிய வழக்குகள் தொடர்பான, ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், மிருசுவிலில் 8 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த குற்றவாளியான இராணுவ அதிகாரிக்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளதையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.