வடகிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு அழைப்பு விடுவதாக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கு பூர்வீக குடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக போராடி வருகின்றோம்.
ஆனால் தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை யாவரும் அறிவோம்.
யுத்தம் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளில் வடகிழக்கை இராணுவ மயமாக்கிவரும் அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடகிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல் திட்டங்களை அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப் படுத்தி வருகிறது.
மேலும் வடகிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
அத்துடன் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர்.
இது அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களை புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாசாகளை எரியூட்டி வருகின்றனர். இதற்கு எதிராக போராடும் முஸ்லீம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர்.
சிறைகளில் விசாரணைகள் இன்றி தமிழ் அரசியல் கைதிகளாக பலர் உள்ளனர். ஆனால் பல குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறது.
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட் உறவுகளை தேடி வருடக்கணக்கில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான நீதியை வழங்காது அரசாங்க ஏமாற்றி வருகிறது.
அத்துடன் மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1000 ரூபா சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றனர் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. இவ்விடயங்களை உலகறியச் செய்யும் இந்த மூன்று நாள் போராட்டம் நடைபெறவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது