தமிழ்நாட்டில், 52 ஆயிரத்து 257 கோடி ரூபா மதிப்பீட்டிலான, 34 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு, மாநில அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமராஜ் தவிர மற்ற அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 52 ஆயிரத்து 257 கோடி ரூபா திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
அந்தவகையில் 34 புதிய தொழிற் திட்டங்கள் மூலம், 93 ஆயிரத்து 935 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தமிழ்நாடு தொழில் கொள்கை-2021″ வெளியிடவும், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





